search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுகு எண்ணைய்"

    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    ×